Wednesday, November 27

'குரூப் - 2' பணிக்கான புதிய தேர்வு முறை டிச., 1 வரை கருத்து தெரிவிக்க அழைப்பு

குரூப் - 2' பணிக்கான, புதிய தேர்வு திட்டம் குறித்து, வரும், 1ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் - 2 மற்றும் 2 - ஏ பிரிவில் அடங்கிய பணிகளுக்கு, முதல் நிலை தேர்வு மற்றும் பிரதான தேர்வு நடத்த, புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல் நிலை தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில பாட கேள்விகளை நீக்கிவிட்டு, பொது அறிவு சார்ந்த, 200 கேள்விகள் கேட்பது என, முடிவானது. பிரதான எழுத்து தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பு, பொருள் உணர்திறன், சுருக்கி எழுதுதல், கடிதம் எழுதுதல் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.பின், தேர்வர்களின் நலன் கருதி, பிரதான எழுத்து தேர்வில், சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, மொழிபெயர்ப்பு பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு, தனி தாளாக தேர்வை நடத்தவும், அதில் குறைந்தபட்சம், 25 மதிப்பெண் பெற வேண்டும் என்றும், அந்த மதிப்பெண், தர வரிசை பட்டியலுக்கு கணக்கில் எடுக்கப்படாது என்றும், முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவை, பல தரப்பிலும் வரவேற்றனர். அதேநேரம், பழைய தேர்வு திட்டத்தின்படி, குரூப் 2 மற்றும், 2 - ஏ தேர்வுக்காக தயாராகும் சில மாணவர்கள், பழைய முறையிலேயே தேர்வை நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, புதிய தேர்வு திட்டம் குறித்து, தேர்வர்களின் கருத்துகளை அறிந்து கொள்ள, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. புதிய பாட திட்டம் மற்றும் தேர்வு திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட வினா வகை பட்டியல், தேர்வாணையத்தில், www.tnpsc.gov.in மற்றும், www.tnpscexams.in என்ற, இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வாணையத்தின் இணையதளத்தில், நிரந்தரப்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், வினா பட்டியலை பார்த்து, கருத்துகளை ஆன்லைனில் தெரிவிக்கலாம். தங்களின் பயனாளர் குறியீடு மற்றும் ரகசிய எண்ணை பதிவு செய்து, அதன் வழியே கருத்துகளை பதிய வேண்டும். வரும், 1ம் தேதி வரை கருத்துகளை பதிவு செய்யலாம். ஒருவர் ஒருமுறை மட்டுமே கருத்துகளை பதிவு செய்ய முடியும்.எனவே, முழுமையாக வினா பட்டியலை ஆய்வு செய்து, அதன்பின், கருத்துகளை தெரிவிக்கவும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Auto Scroll Stop Scroll