Friday, February 2

'தினமலர்' சார்பில் பிப்., 4ல் சென்னை, தி.நகரில் 'நீட்' வழிகாட்டி கருத்தரங்கு! : 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்

'நீட்' மாதிரி தேர்வைத் தொடர்ந்து, 'தினமலர்' சார்பில், 4ம் தேதி, சென்னை, தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில், 'நீட்' தொடர்பான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

கருத்தரங்கில், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, கவுன்சிலிங்கில் பங்கேற்று கல்லுாரிகளை தேர்வு செய்யும் விதம் உட்பட, அப்ளிகேஷன் முதல், அட்மிஷன் வரையிலான அனைத்து தகவல்களையும், கல்வி நிபுணர்கள் நேரடியாக வழங்க உள்ளனர். கடந்த, 28ல், 'தினமலர்' சார்பில் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வில், மாணவர்கள் செய்த பொதுவான பிழைகளும், அதை சரி செய்வது பற்றியும் விளக்கமளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லுாரிகளில் இடம் பிடித்த மாணவர்கள், அவர்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில், பிரத்யேக கேள்வி - பதில் நிகழ்வும் இடம் பெறுகிறது. கருத்தரங்கம், காலை, 10:00 முதல் மதியம், 1.00 மணி வரை நடைபெற உள்ளது. 

'தினமலர்' நாளிதழுடன், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இணைந்து, இக்கருத்தரங்கை நடத்துகிறது. 'நாலெட்ஜ் பார்ட்னர்' ஆக, ஆகாஷ் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது.மருத்துவப் படிப்புகள் மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்து, எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன பேராசிரியர் சத்தியஜித் விளக்கமளிக்கிறார்.

'நீட் தேர்விற்கு தயாராவது எப்படி?' என்பது குறித்து, ஆகாஸ் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் உலகநாதன் மற்றும், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் குறித்து, கல்வி ஆலோசகர் கோவிந்தராஜ் ஆகியோர் விளக்கமளிக்கின்றனர்.
தேர்வு குறித்து விளக்கம்

கருத்தரங்கில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பங்கேற்கலாம். நிகழ்வில், 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் ஏன் இப்போதே, 'நீட்' தேர்விற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்கப்படுகிறது. 
மேலும், கருத்தரங்கில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும், 'நீட்' மாதிரி கேள்வித்தாள் இலவசமாக வழங்கப்படுகிறது.
Auto Scroll Stop Scroll