Friday, February 16

மார்ச் 1-ந்தேதி முதல் ரெயில் பெட்டிகளில் முன்பதிவு ‘சார்ட்’ ஒட்டப்படாது

மின்சார ரெயில் பயணங்களில் டிக்கெட் எடுப்பதை தவிர்த்து, செல்போன் மூலமாகவே டிக்கெட் எடுக்கும் (‘காகிதமில்லா டிக்கெட்’ சேவை) திட்டம் பயணிகளிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் டிக்கெட் எடுப்போரின் எண்ணிக்கை 10 லட்சத்தையும் தாண்டி இருக்கிறது.

இதுபோல நவீன திட்டங்களை தொடர்ந்து ரெயில்வே துறையில் புகுத்தி முழுவதும் ‘டிஜிட்டல்’ முறைக்கு ரெயில்வே துறையை கொண்டுவர மத்திய அரசு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

இந்தநிலையில் மின்சார ரெயில்களை போல இதர பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் இந்த நடைமுறையை வேறு வழியில் புகுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. குறிப்பாக லட்சக்கணக்கில் மக்கள் பயணம் செய்துகொண்டிருக்கும் ரெயில்வே துறையில் காகிதத்தின் பயன்பாட்டையும், அதனால் ஏற்படும் செலவை வெகுவாக குறைக்கும் நோக்கிலும் ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.

முன்பதிவு ‘சார்ட்’ இருக்காது

இதற்கான சோதனை முயற்சி சென்னை சென்டிரல், டெல்லி, நிஜாமுதீன், மும்பை சென்டிரல், அவுரா, சீல்தா உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த 3 மாதங்களில் மேற்கண்ட ரெயில் நிலையங்களில் இயக்கப்பட்ட பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு ‘சார்ட்’ (முன்பதிவு பட்டியல் குறித்த அறிக்கை) ஒட்டப்படவில்லை. இதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் இந்தியாவில் உள்ள ‘ஏ1’, ‘ஏ’ மற்றும் ‘பி’ கிரேடு பெற்ற ரெயில் நிலையங்களில் புறப்படும் மற்றும் அந்த ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களில் முன்பதிவு ‘சார்ட்’ ஒட்டும் நடைமுறை கைவிடப்பட உள்ளது.

இந்த புதிய நடைமுறை வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக அனைத்து ரெயில்வே கோட்ட அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

காகித பயன்பாடு குறையும்

எனவே வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் சென்னையில் இருந்து புறப்படும் பாண்டியன், வைகை, பொதிகை, செங்கோட்டை, நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, மலைக்கோட்டை, குருவாயூர், திருவனந்தபுரம், பல்லவன், நாகர்கோவில், ராமேஸ்வரம் உள்பட அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில் மற்றும் சென்னை மார்க்கமாக செல்லும் சதாப்தி, துரந்தோ, ஹம்சபார், ராஜ்தானி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயில்கள் என அனைத்திலுமே முன்பதிவு ‘சார்ட்’ இருக்காது.

இந்த புதிய திட்டம் குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “தற்போது பெருவாரியான டிக்கெட்டுகள் ஆன்-லைன் மூலமே எடுக்கப்படுகின்றன. எனவே அந்த பயணிகளுக்கு முறையான தகவல்கள் அடிக்கடி எஸ்.எம்.எஸ். மூலம் செல்போன்களுக்கு சென்றுசேரும். கவுண்ட்டர்களில் டிக்கெட் எடுப்போரும் இப்போது செல்போனிலேயே தங்களது பி.என்.ஆர். நிலையை அறிந்துகொள்கின்றனர். எனவே இது நல்ல திட்டம். இதன்மூலம் காகித பயன்பாடு பெருமளவில் குறையும்”, என்றனர்.

பயணிகள் அதிருப்தி

ஆனால் ரெயில்வே நிர்வாகத்தின் இந்த புதிய திட்டத்துக்கு பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:-

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்திலோ அல்லது செல்போன் ‘ஆப்’கள் மூலமோ டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் முன்பதிவு குறித்த அறிவிப்பும், இருக்கை, அல்லது படுக்கை எண் குறித்த விவரம் வரும் ஆனால் கவுண்ட்டர்களுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உறுதியான டிக்கெட்டுகளுக்கு மட்டுமே இருக்கை எண் விவரம் குறிப்பிடப்படும். காத்திருப்பு டிக்கெட்டுகளுக்கு WL என்பதைத் தவிர எந்த குறியீடும் இருக்காது. அந்த காத்திருப்பு டிக்கெட்டுகள் உறுதியானால் கூட எங்களுக்கு தெரியாது.

இதனால் ரெயில் பெட்டிகளில் ஒட்டப்படும் முன்பதிவு ‘சார்ட்’ மட்டுமே எங்களுக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. அந்த ‘சார்ட்’டில் பெயர் இருந்தால் உரிய இடத்துக்கு சென்று அமருவோம். இப்போது அந்த ‘சார்ட்’ ஒட்டும் நடைமுறையை ரத்து செய்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது? டிக்கெட் பரிசோதகர் எங்கு இருக்கிறார்? என்று அலைந்து திரிவதே வேலையாகிவிடும்.

குழப்பங்கள் இனி நிச்சயம்

மேலும் படிப்பறிவு இல்லாத, வயதான பயணிகளுக்கு இது பெரும் பிரச்சினையாக அமையும். என்னதான் ‘ஆன்-லைன்’ மூலம் டிக்கெட் பதிவு செய்திருந்தாலும் செல்போனில் வரும் எஸ்.எம்.எஸ்.களை படிக்க தெரியாத முதியோர் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் இருக்கையை இந்த ‘சார்ட்’டை பார்த்தோ, அல்லது பிறர் அதை பார்த்து கூறக்கேட்டோ கண்டுபிடித்து கொள்வார்கள். ஆனால் இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. இதனால் தேவையில்லா குழப்பங்கள் ஏற்படப்போவது தான் நிச்சயம்

இதன்மூலம் எங்கள் டிக்கெட் உறுதி செய்யப்பட்டதை அறிய அடிக்கடி பி.என்.ஆர். பக்கத்துக்கு செல்ல வேண்டியது வரும். ரெயில்வே துறையில் ‘டிஜிட்டல்’ மயத்தை வரவேற்கிறோம். அதற்காக தேவையான நடைமுறை விஷயங்களை இப்படி நீக்குவது சரியல்ல.

இவ்வாறு பயணிகள் கூறினர்.
Auto Scroll Stop Scroll