Monday, January 29

பயிற்சி செய் முயற்சி செய் தேவையில்லை 'நீட்' அச்சம்:தினமலர் கருத்தரங்கில் வல்லுனர்கள் அசத்தல் ஆலோசனை

'முறையான பயிற்சியும், தொடர் முயற்சியும் இருந்தால் 'நீட்' தேர்வு அச்சம் மாணவர்களுக்கு தேவையில்லை' என மதுரையில் தினமலர் நடத்திய கருத்தரங்கில் வல்லுனர்கள் தெரிவித்தனர்.தினமலர் மற்றும் எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி சார்பில் மருத்துவ படிப்பிற்கான 'நீட்' நுழைவு தேர்வு குறித்த கருத்தரங்கு பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்தது.


இதில் வல்லுனர்கள் பேசியதாவது:எப்படி படிக்க வேண்டும்சுவாமிநாதன், நிர்வாக இயக்குனர், ஸ்மார்ட் டிரைனிங் ரிசோர்சஸ் இந்தியா பிரைவேட் லிட்., சென்னை: மாணவர்களிடையே இன்றும் டாக்டர் கனவு குறையவில்லை. இப்படிப்பிற்கு 'நீட்' தேர்வு அவசியம். 'மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுக்கும்' முறையை பின்பற்றினால் டாக்டர் ஆக முடியாது. பணம் இருந்தால் டாக்டர் சீட் பெற்றுவிடலாம் என்பதும் இனி நடக்காது. புரிந்து, நன்றாக படித்து தகுதி இருந்தால்தான் டாக்டர் ஆக முடியும்.


'நீட்' என்பது அச்சுறுத்துதல் இல்லை. அது மாணவர்களுக்கான ஒரு வாய்ப்பு. மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களும் கடந்தாண்டு தேர்வில் சாதித்துள்ளனர். இதற்கான பாடத்தில் 300 தலைப்புகள், 110 பிரிவுகள், 200 வகை கணக்குகளில் நன்றாக பயிற்சி பெற்றிருந்தால் எளிதில் வெற்றி பெறலாம்.
வெற்றிக்கான மந்திர சொல்ஜான்கென்னடி வேத நாதன், முதல்வர், செயின்ட் ஜான்ஸ் கல்லுாரி, நெல்லை:'நீட்' தேர்வு என்பது சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு மட்டும் உரியது என நினைக்க வேண்டாம். அனைத்து மாணவர்களும் எளிதில் வெற்றி பெறலாம். 'பயிற்சி செய்... முயற்சி செய்... விண்ணில் கால் பதிக்கலாம்' என்ற மந்திர சொல்லை மாணவர்கள் மனதில் பதித்து படிக்க வேண்டும். அறிவியலில் கண்டுபிடிப்பாளர் பெயரை மட்டும் தெரிந்து வைத்திருப்பதுடன், அந்த கண்டுபிடிப்பிற்கு பின்னால் அவரது உழைப்பு, பின்புலத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மாணவர்களுக்கு வேண்டும். 


'தியரி'யை மட்டும் படிப்பதோடு நின்று விடாமல் அதற்கான 'அப்ளிகேஷனையும்' சேர்ந்து படிக்க வேண்டும். மொத்தம் 55,760 மருத்துவ இடங்களில் 85 சதவீதம் அந்தந்த மாநில அளவிலும், 15 சதவீதம் தேசிய அளவிலான கோட்டா மூலமும் நிரப்பப்படுகின்றன. தமிழக மாணவர்கள் அந்த 15 சதவீத இடங்களிலும் கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும்.செய்ய கூடியது செய்ய கூடாததுவெங்கடேசன், இணை இயக்குனர், ஸ்மார்ட் டிரைனிங் ரிசோர்சஸ் இந்தியா பிரைவேட் லிட்., சென்னை:ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வர உள்ளது. இத்தேர்வுக்கு தயாராவதன் மூலம் ஜிப்மர் மற்றும் ஏ.ஐ.ஐ.எம்.எஸ்.,ன் மருத்துவ இடங்களுக்கான தேர்வுகளையும் எழுதலாம். பிளஸ் 2வில் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற வேண்டும். தேர்வில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டை மிக கவனமாக நிரப்ப வேண்டும். 15 சதவீதம் மாணவர்களுக்கு, இதை எவ்வாறு நிரப்புவது என்பது தெரிவதில்லை. எளிமையான வினாவாக இருந்தாலும் கவனமாக நிரப்ப வேண்டும். தவறான வினாவிற்கு ஒரு 'மைனஸ்' மதிப்பெண் உண்டு. தெரியாத வினாவிற்கு விடை எழுத கூடாது. சரியான நேரத்திற்குள் தேர்வு அறைக்குள் சென்று விட வேண்டும்.
உயிரியல் பகுதி வினாக்களை தலா 20 நொடிகளில் எழுதி முடித்தால் வேதியில், இயற்பியல் பிரிவுகளில் கணக்கு பகுதி வினாக்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கலாம். நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேரம் படிக்க வேண்டும். பாடத் திட்டத்தில் உள்ள முக்கிய பாடப் பகுதியில் இருந்து ஐந்தாயிரம் வினாக்களுக்கு கட்டாயம் விடை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.


மருத்துவ படிப்பு எதிர்காலம்
டாக்டர் விஜய்கிருஷ்ணன், உதவி பேராசிரியர், எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, சென்னை: டாக்டர்களுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டருக்கும் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளனர். வளர்ந்த நாடுகளில் இது 1000 : 2.5 என்ற விகிதத்தில் உள்ளது. வெளிநாடுகளில் இந்திய டாக்டர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எம்.பி.பி.எஸ்., படித்து யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்று ரயில்வே உட்பட மத்திய அரசு நிறுவனங்களில் பணிகளுக்கு செல்லலாம். இதுதவிர மாநிலத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியாற்றலாம். தனியார் மருத்துவ கல்லுாரி, பல்கலைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. மருத்துவ பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களிலும் வாய்ப்புகள் அதிகம். இத்தேர்வில் 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கலாம். 


கடின உழைப்பு 
இருந்தால் எளிதில் வெற்றி பெறலாம். இவ்வாறு பேசினர். கருத்தங்கை சென்னை ஸ்மார்ட் லேர்னிங் சென்டர், தினமலர் கல்விமலர் இணைந்து வழங்கியது.
Auto Scroll Stop Scroll