Monday, November 27

 கைகளை 'கட்டியதால்' சாத்தியமில்லை... நூறு சதவீத தேர்ச்சி! ஆசிரியர்கள் குமுறல்

வேலுார் பனப்பாக்கத்தில், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, ஆசிரியர்கள் 'வாட்ஸ்-ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் - மாணவர் உறவை வலுப்படுத்த, உளவியல் ஆலோசனை வழங்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது. அத்தோடு, மாணவர்களை எந்த வகையிலும், கண்டிக்க அனுமதிக்காமல், நுாறு சதவீத மதிப்பெண் பெற வலியுறுத்துவது சாத்தியமில்லை என்பதையும், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி, மாணவர்களை மனம் புண்படும்படி திட்டவோ, அடிக்கவோ கூடாது. இதை, கல்வியாண்டு துவங்கும் போதே, ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளில், ஆண்டுதோறும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், மதிப்பெண்கள் பெறாத மாணவர்களை கண்டிக்குமாறு, பெற்றோரே ஆசிரியரிடம் முறையிடுவதும் உண்டு. ஆசிரியரின் கண்டிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

வேலுார், பனப்பாக்கம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாதாந்திர கணிதத்தேர்வில் தோல்வியை தழுவிய காரணத்திற்காக, பெற்றோரை அழைத்து வரும்படி கூறியதால், நான்கு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவத்திற்காக, தலைமையாசிரியர் ரமாமணி, வகுப்பு ஆசிரியர் மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகிய இருவரும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'பள்ளிக்கு தாமதமாக வரும், மாணவர்களை எதுவும் கூறாமல் இருந்தால், ஒழுக்கம், கீழ்படிதல் ஆகிய, நற்பண்புகள் எப்படி வளரும், தோல்வியை தழுவிய மாணவிகளின், கற்றல் நிலையை, பெற்றோரிடம் எடுத்து கூற, அழைத்து வரும்படி உத்தரவிட்டது, ஆசிரியரின் கடமையல்லவா, இப்படி எல்லா நிலைகளிலும், ஆசிரியரின் கைகள் கட்டப்பட்ட பின், நுாறு சதவீத தேர்ச்சியை எதிர்பார்ப்பது நியாயமா' என, அடுக்கடுக்கான கேள்விகணைகளை தொடுத்து, ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.தோல்வியை எதிர்கொள்ளவும், கண்டிப்பை ஏற்கவும் கூட, முடியாத அளவுக்கு, தற்போதைய கல்விமுறை இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. 

இது சார்ந்து, அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைத்து, சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பயம், பதட்டமில்லாமல், தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வது, தற்கொலை எண்ணங்களை தவிர்க்க, மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டுவது அவசியம் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சாமி. சத்தியமூர்த்தி கூறியதாவது:ஆசிரியர்-மாணவர் உறவில், விரிசல் இருப்பதை, உறுதி செய்யும் சம்பவங்கள், அடிக்கடி நடக்கின்றன. இதுபோன்ற தருணங்களில், சம்பவத்தின் உண்மைத்தன்மை ஆராயப்பட்ட பின், நடவடிக்கை எடுப்பது அவசியம். மாணவர்களை வழிநடத்தும் விதம் குறித்து, ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்பு, நடத்த வேண்டும். தேர்ச்சி சதவீதத்தை மட்டும் இலக்காக முன்னிறுத்தி, பணிபுரியும் ஆசிரியர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். பள்ளி சூழலை ஆரோக்கியமானதாக்க, ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். இதை உருவாக்க வேண்டியது, கல்வித்துறையின் முக்கிய கடமையாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Auto Scroll Stop Scroll