Tuesday, October 17

போளூர் கணித ஆசிரியருக்கு கத்திக்குத்து

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கணித ஆசிரியரை கத்தியால் குத்தி, தப்பி ஓடிய வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2,200 மாணவியர் படித்து வருகின்றனர்.



இங்கு, 60 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில், கார்த்திகேயன், 39, என்ற மாற்றுத்திறனாளி, கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று காலை, 10:00 மணிக்கு, பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், ஆசிரியர் கார்த்திகேயனிடம், 'உங்களிடம் தனியாக பேச வேண்டும்' என, கூறி, பள்ளி வளாகத்தில் சிறிது துாரம் அழைத்துச் சென்றார்.


பின், திடீரென கையில் வைத்திருந்த கத்தியால், ஆசிரியரின் கழுத்தில் வெட்டினார்.
சுதாரித்த கார்த்திகேயன், அங்கிருந்து கூச்சலிட்டவாறு தப்பி ஓடினார். அதற்குள், கத்தியால் வெட்டிய வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி, தலைமறைவானார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்கள், கார்த்திகேயனை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போளூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவை வைத்து, தப்பி ஓடிய வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
Auto Scroll Stop Scroll