Monday, October 23

தாய், தந்தை சமாதி அருகில் ஆசிரியர் உடலை அடக்கம் செய்த மாணவர்! : நிஜமானது மாதா, பிதா, குரு

போட்டி நிறைந்த உலகில், 'நம்மை விட அவன் வளர்ந்து விட்டானோ' என பொறாமை படாத ஒரே ஜீவன் ஆசிரியர் மட்டுமே! ஒரு குழந்தை, தாய், தந்தையை விட அதிக நேரம் செலவழிப்பது ஆசிரியரிடம்தான். எனவேதான், 'மாதா.. பிதா.. குரு... தெய்வம்..!' என்றார்கள்.


இதை வெறும் பழமொழியாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு மத்தியில் நிஜமாகவே தாய், தந்தைக்கு இணையாக, தன் ஆசிரியருக்கு மரியாதை செலுத்திய, முன்னாள் மாணவரின் சமீபத்திய செய்கை, சிறுமுகை அருகே அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.


மேட்டுப்பாளையம், சிறுமுகை அருகே 'சவுத் இந்தியன் விஸ்கோஸ்' நிறுவனத்தால், தொழிலாளர்களின் குழந்தைகள் நலனுக்காக எஸ்.ஐ.வி., பள்ளி கடந்த, 1960களில் துவங்கப்பட்டது. 


தற்போது, இதை வேறு ஒரு அறக்கட்டளை நடத்துகிறது. இப்பள்ளி, கடந்த, 1980ல் மெட்ரிக் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்போது, திருநெல்வேலியை சேர்ந்த பால்துரை என்பவர், பிளஸ் 1, 2 வகுப்பின் உயிரியியல் ஆசிரியராக சேர்ந்து பணியாற்றினார். இப்பள்ளி பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது; பால்துரை தலைமை ஆசிரியரானார். இவரது முப்பது ஆண்டு ஆசிரியப்பணியில் ஏறத்தாழ, 300 மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், இன்ஜினியர்கள் உருவாகியுள்ளதாக, முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த, 2010ல் இவர் ஓய்வு பெற்றாலும், முடியாதவர்களுக்கு தொடர்ந்து பாடம் கற்றுக்கொடுத்து வந்தார். இவரது சேவையை பாராட்டி, பள்ளி முன்னாள் மாணவர்கள் ஐந்தாயிரம் பேர் இணைந்து, பள்ளியின் பொன்விழா முன்னிட்டு, 2015ல் இவருக்கு பாராட்டு விழா நடத்தி, கவுரவித்தனர். இவரது இரு மகன்களும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் செட்டிலாகி விட்டனர். மனைவி அமரஜோதியுடன் சிறுமுகையில் வசித்து வந்த இவர் நோய்வாய்ப்பட்டு, கடந்த 14ல் உயிரிழந்தார். வெளிநாட்டிலிருந்து மகன்கள் உடனே வர முடியாத சூழ்நிலை. தனிமையில் தவித்த அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். அப்போது அங்கு சென்ற, முன்னாள் மாணவர் கணபதி என்பவர், 'நான் அவரிடம் பயின்ற மாணவன். தாய், தந்தைக்கு நிகராக போற்றுகிறேன். இன்று நான் நல்ல நிலையில் உள்ளேன். என் தாய், தந்தை இறந்துவிட்டனர்; அவர்களை என் வீட்டுத் தோட்டத்திலேயே அடக்கம் செய்திருக்கிறேன். அவர்களுக்கு அருகிலேயே, ஆசிரியரையும் அடக்கம் செய்து மரியாதை செலுத்த விரும்புகிறேன்' என்றார். அருகிலிருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். பால்துரையின் மனைவி கண்ணீர் பெருக்குடன் நன்றி கூற, அவ்வாறே அவரது உடல் அடக்கமும் நடந்தது. 


தன்னை வழிநடத்திய ஆசானுக்கு, மதவேறுபாடு பார்க்காமல் பெற்றோருக்கு இணையான மரியாதை செலுத்திய முன்னாள் மாணவர் கணபதியை சிறுமுகை மக்கள் பாராட்டுகின்றனர். 

இதுகுறித்து, கணபதி கூறுகையில், 'எனது போட்டோ, ஆசிரியரின் போட்டோ எதுவும் வெளியிட வேண்டாம். அவருக்கு நான் செய்த மரியாதை மிகச்சாதாரணமானது. கடந்த, 1986ல் அவரிடம் பயின்றேன். இன்று நல்ல நிலையில், சின்னசேலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறேன். அவருக்கு மரியாதை செலுத்தும் இவ்வாய்ப்பு எனக்கு கிடைத்த பாக்கியம்,'' என்றார்.
Auto Scroll Stop Scroll