Thursday, October 5

பாதுகாப்பு கருதி, வீட்டுக்கு எடுத்து சென்ற 'லேப்டாப்'- தலைமை ஆசிரியர் சிறைப்பிடிப்பு : திருடிச் செல்வதாக சந்தேகம்

தாமரைக்குளம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களுக்கான 'லேப்டாப்'களை பாதுகாப்பு கருதி, தனது வீட்டிற்கு காரில் எடுத்துச் சென்றார். அதை தவறுதலாக புரிந்து கொண்ட சிலர் , அவரை 2 மணி நேரம் சிறை பிடித்தனர்.


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 மாணவர்கள் 74 பேருக்கு வழங்குவதற்காக அரசின் இலவச 'லேப்டாப்' 4 நாட்களுக்கு முன் வந்தது. 'பள்ளிக்கு வாட்ச்மேன் இல்லை. சிலர் பள்ளி வளாகத்தில் மதுகுடிப்பது உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே 'லேப்டாப்' பாதுகாப்பு கருதி போலீஸ்காரர் ஒருவரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பிவைக்கும்படி', தலைமை ஆசிரியர் 
சிவானந்தம்,தென்கரை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணனிடம் வலியுறுத்தி உள்ளார். ஓரிரு நாளில் போலீசாரை அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, சிவானந்தம் பாதுகாப்பு கருதி பள்ளியில் இருந்து தனது காரில், முதற்கட்டமாக 52 'லேப்டாப்'களை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். மீதமுள்ள 22 'லேப்டாப்'களை ஏற்றிக்கொண்டு புறப்படும்போது, சிலர் இரவோடு, இரவாக 'லேப்டாப்'களை சிவானந்தம் திருடிச் செல்கிறார் எனக் கருதி பள்ளி அருகே அவரது காரை மறித்தனர். அவர் 2 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டார். இச்சம்பவத்தின்போது ஒரு லேப்டாப் திருடுபோனது. தென்கரை போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு, சிவானந்தம் விடுவிக்கப்பட்டார். ஸ்டேஷனுக்கு 'லேப்டாப்'புடன் கார் கொண்டு செல்லப் பட்டது.டி.எஸ்.பி., வினோஜி, தலைமை ஆசிரியர் சிவானந்தத்திடம் நடத்திய விசாரணையில், பாதுகாப்பு கருதி வீட்டிற்கு 'லேப்டாப்' கொண்டு செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

சிவானந்தம் கூறியதாவது: தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தியிடம் தெரிவித்த பிறகு, பாதுகாப்பு கருதி 'லேப்டாப்'பினை, அலுவலர் ஒருவர் உதவியுடன் எனது வீட்டிற்கு எடுத்துச் சென்றேன் என்றார். மாவட்ட கல்வி அலுவலர் செல்வம் கூறியதாவது: தாமரைக்குளம் பள்ளிக்கு 74 லேப்டாப் வந்தது. பாதுகாப்பு கருதி சிவானந்தம் வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளார். இரவில் எடுத்துச் சென்றது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 'லேப்டாப்'கள் 
பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன என்றார்.
Auto Scroll Stop Scroll