Friday, September 8

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பணியை துறந்த ஆசிரியர்!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பணியை துறந்த ஆசிரியர்!
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4ந் தேதி முதல் பள்ளி-கல்லூரி மாண வர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், மறியல், மனித சங்கிலி, பேரணி ஆகிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 4-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றிய சபரிமாலா, தனது 7 வயது மகனுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

இப்போராட்டத்துக்கு அரசு அனுமதியளிக்க மறுத்த காரணத்தினால் தன்னுடைய ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக அவர் விழுப்புரம் மாவட்டம் தொடக்கப்பள்ளி அதிகாரியிடம் அளித்துள்ள கடிதத்தில், நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ஆசிரியராக தமிழகக் கல்வித்துறையில் பணியாற்றிவருகிறேன்.

மாணவர்களுக்காக எனது வாழ்வையே அர்ப்பணித்து பல மாநில சாதனையாளர்களை உருவாக்கியுள்ளேன். ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும் என்பதற்காகவே எனது மகனை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கிறேன்.

இந்நிலையில் மாணவி அனிதாவின் மரணத்தை ஓர் ஆசிரியராகக் கல்வி எழுச்சிகொள்ள வேண்டிய தருணமாக உணர்ந்தேன்.

ஒரே கல்வி இல்லாமல் ஒரே தேர்வு எப்படி நியாயமாகும் என்ற வேதனையில் எனது வெளிப்பாட்டைத் தன்னெழுச்சியை 6.9.17 அன்று காலை 9.30 மணிக்கு எனது பள்ளிக்கு வெளியே உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன்.

அனுமதியில்லாமல் தொடரக் கூடாது என்றதும் 1.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி காவல்துறையிடம் அனுமதி கேட்டேன், அவர்கள் அனுமதி வழங்கவில்லை.

ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஆசிரியர் கல்வி பிரச்னைக்காகக் குரல் எழுப்பியது குற்றம் என்று சொல்கிறது சட்டம்.

சம்பளத்துக்காக ஆசிரியர்கள் போராடும்போது சமத்துவம் கொண்ட கல்விக்காக ஓர் ஆசிரியர் போராடக் கூடாது என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

என் வேலையைவிட எனக்கு தேசம் முக்கியம் என்பதால் என் ஆசிரியர் பணியை 7.9.2017 முதல் வருத்தத்தோடு ராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Auto Scroll Stop Scroll