Friday, September 1

‘பான்’ எண்ணுடன் ‘ஆதார்’ எண் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு டிசம்பர் 31–ந்தேதி வரை அனுமதி

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31–ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
ஆதார் இணைப்பு
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ‘ஆதார்’ எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் (பான்) அளிக்கப்படுகிறது.

அந்த பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு, ஜூலை 31–ந்தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது. பிறகு இந்த கால அவகாசம் ஆகஸ்டு 31–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
நீட்டிப்பு
நேற்றுடன் காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், திடீரென மத்திய அரசு இந்த காலக்கெடுவை நீட்டித்து நேற்று உத்தரவிட்டது.
அதன்படி, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31–ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை அளிப்பதற்கான கால அவகாசமும் டிசம்பர் 31–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வங்கிக்கணக்கு
வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் டிசம்பர் 31–ந்தேதிதான் கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், பான்–ஆதார் இணைப்புக்கும் டிசம்பர் 31–ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் பற்றிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளது. காலக்கெடு நீட்டிப்புக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
இதுபற்றிய முறையான அறிவிக்கையை வருவாய்த்துறை வெளியிட உள்ளது.
யாருக்கு விலக்கு?
இருப்பினும், வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், இந்திய குடிமகன் அல்லாதவர்கள், 80 வயதை கடந்தவர்கள், அசாம், மேகாலயா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Auto Scroll Stop Scroll