Tuesday, July 25

கல்வி, யோகாவுடன் இயற்கை விவசாயமும் பயிற்வித்து அசத்தல்: பூங்கா போல் செயல்படும் பரளி அரசுப் பள்ளி

கோழிப்பண்ணை, லாரித் தொழிலுக்கு புகழ் பெற்ற நாமக்கல் மாவட்டம் கடந்த 15 ஆண்டுகளாக கல்வியிலும் சிறந்து விளங்கி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி பயில நாமக்கல் மாவட்டத்தை நாடி வருகின்றனர். அந்த வகையில் கல்வி மாவட்டம் என்ற அந்தஸ்தையும் நாமக்கல் பெற்று வருகிறது.
தனியார் கல்வி நிறுவனங்களே இந்த புகழுக்கு காரணம் என்ற போதிலும், அவற்றுக்கு சற்றும் சளைக்காத வகையில் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளைப் போலவே மாணவர்களை அதிக எண்ணிக்கையில் அவர்களது பெற்றோர்கள் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பங்களிப்பு மற்றும் கிராம மக்களின் ஒத்துழைப்பே காரணம் என்றால் அது மிகையில்லை. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் மோகனுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள், மாணவர்களின் ஒத்துழைப்புடன் தனியார் பள்ளிகளுக்கு நிகராக துாய்மை, சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பள்ளியின் சுவர்களில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்.
பள்ளியின் செயல்பாட்டைக் காணும் மக்கள் அருகே தனியார் பள்ளிகள் இருந்தபோதிலும், தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி சேர்க்கப்பட்ட தங்களது குழந்தைகளையும் அங்கிருந்து விடுவித்து, இப்பள்ளியில் சேர்த்து வருகின்றனர். அப்படி என்ன தான் பள்ளியில் கற்பிக்கின்றனர் என்ற சந்தேகம் நமக்குள் எழுந்தது.
எனவே பள்ளிக்கு நேரடியாக சென்று அதன் செயல்பாடுகளை பார்த்தபோது தான், மேற்குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் மிகையில்லை என்பதை உணர முடிந்தது. இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ப. சாந்தி கூறியதாவது:
இப்பள்ளி துவங்கி 75 ஆண்டுகளாகின்றன. கடந்த 2012-ம் ஆண்டு இப்பள்ளியின் தலைமையாசிரியராக பொறுப்பேற்றேன். பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நான் தலைமையாசிரியராக பொறுப்பேற்ற சமயத்தில் மொத்தம் 104 மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது பள்ளியில் 157 மாணவர்கள் பயில்கின்றனர். இதற்கு பள்ளி பராமரிப்பு முக்கிய காரணம். நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கிராம மக்களின் உதவியுடன் பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டு செடிகள் நடப்பட்டன. அழகிய செடிகள் மட்டுமின்றி காய்கறிச் செடிகளும் நடப்பட்டன.
இவை மாணவர்கள் மூலமே பராமரிப்பு செய்யப்படுகின்றன. அவ்வப்போது ஊராட்சிப் பணியாளர்களும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வர். தொடர் பராமரிப்பால் பள்ளி வளாகம் தற்போது பூங்கா போல் காட்சியளிக்கிறது. இதற்கு மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். ஒவ்வொரு பள்ளியிலும் சுற்றுச்சூழல் மன்றம் உள்ளது. அதுபோல், எங்களது பள்ளியிலும் சுற்றுச்சூழல் மன்றம் உள்ளது. இந்த மன்றம் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் 5 துறைகளாக பிரிக்கப்பட்டது. இதன்படி சுகாதாரத் துறை, சத்துணவுத் துறை, பராமரிப்புத் துறை, சீரமைப்புத் துறை, நிர்வாகத் துறை என, 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு துறைக்கும் மாணவர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாக உள்ளனர்.  சுகாதாரத் துறை மாணவர்கள், குடிநீர், கழிவறை உள்ளிட்டவை சுகாதாரமாக பராமரிக்கப்டுகிறதா என்பதை பார்வையிடுவர். இதில் குறைபாடு இருந்தால் சம்மந்தப்பட்ட துறையை மேற்பார்வையிடும் ஆசிரியரிடம் தெரிவித்து அவற்றுக்கு தீர்வு காண்பர். இதுபோல், ஒவ்வொரு துறையும் செயல்படுகிறது. இது மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஸ்மார்ட் கிளாஸ்
மாணவர்களின் கல்வியை காட்சி வடிவில் வழங்க ஸ்மார்ட் கிளாஸ் உள்ளது. இதற்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி கிளப் வழங்கியது. ஸ்மார்ட் கிளாஸ் பாடம் சம்மந்தப்பட்டதற்கு மட்டுமின்றி அறிவியல் தொடர்பான செய்முறை விளக்கம், வரலாற்று நிகழ்வுகளை மாணவர்கள் அறியவும், ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் பயன்படுத்தப்படுகிறது.
நாள்தோறும் ஒரு வகுப்பு ஒரு மணி நேரம் ஸ்மார்ட் வகுப்பை பயன்படுத்துகின்றனர். வரும் காலத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கும் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிக் கொடுத்து, அவர்களது வகுப்பிலேயே ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளியில் உள்ள ஸ்மார்ட் வகுப்பு.
இதுபோல், ஆசிரியர்களுக்கு காலர் மைக் வாங்கிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி மட்டுமின்றி விளையாட்டிலும் மாணவர்கள் மேம்படுத்த பள்ளியின் எதிரில் விளையாட்டுத் திடல் உள்ளது. மாணவர்கள் தங்களது விளையாட்டு வகுப்பில் கட்டாயம் விளையாடவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பள்ளியின் செயல்பாட்டைக் கண்டு கடந்த ஆண்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சிறிய ஆட்டோவில் திருவிழாவுக்கு செல்லுவது போல் தங்களது மாணவர்களை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தனர்’’,என்றார்.
பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பிற ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘கல்வியைத் தாண்டி மாணவர்களை ஊக்கப்படுத்த மாதந்தோறும் கலாச்சார விழா நடத்தப்படுகிறது. நடனம், நாட்டியம், நாடகம், பேச்சு, கட்டுரைப் போட்டி போன்றவை நடத்தப்படுகின்றன. இதில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்களும் கலந்து கொள்வர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பள்ளியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பரிசாக வழங்கப்படுகிறது.
இதுபோல், பள்ளியில் விளையும் காய்கறிகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இவை இயற்கையான முறையில் விளைவிக்கப்படுவை. இதன்மூலம் இயற்கை விவசாயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதுபோல்,  பள்ளியில் உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. இதில், நமது பாரம்பரிய உணவு வகைகள் பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்களைக் கொண்டு தயார் செய்து வழங்கப்பட்டது. மேலும், தமிழர் அடையாளமான பொங்கல் பண்டிகையும் பள்ளியில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவை அனைத்திலும் மாணவர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் கலந்து கொள்வர்.
கல்வியைத் தாண்டி மாணவர்களுக்கு யோகா போன்ற பிற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதில் எங்களது பள்ளி மாணவ, மாணவியர் சிறந்து விளங்குகின்றனர். பேச்சுப் போட்டி மற்றும் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியில் எங்களது பள்ளி மாணவியர் பெ. சுமதி, ப. கவுசிகா இருவரும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர். அதுபோல் உடல் ஆரோக்கியம், ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்தும் பயிற்றுவிக்கப்படுகிறது’’,என்றனர்.

பள்ளி தலைமையாசிரியர் ப. சாந்தி.

ஆங்கில வழிக்கல்வி
பள்ளியில் தமிழ், ஆங்கில வழிக்கற்றல் ஆகிய இரு முறைகளும் உள்ளன. ஆங்கில வகுப்பபில் 27 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் உச்சரிப்பை வைத்து ஆங்கில வார்த்தைகள் எளிதாக சொல்லும் முறை கற்பிக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் பை தவிர்க்க விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பைகளின் ஆபத்து குறித்து விளக்கி கூறுவதுடன், அவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளியைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து 2,500 கிலோ பிளாஸ்டிக் பைகளை அகற்றப்பட்டது, அவை மறு சுழற்சிக்காக ஒப்படைக்கப்பட்டது
Auto Scroll Stop Scroll