Wednesday, June 28

மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி மறுத்தது.

இதுதொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அந்த பள்ளி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.



அந்த மனுவில், ‘அரசு பள்ளி களில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுப்பது பாரபட்சமானது. எனவே, எங்களது பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு செல்வது கிடையாது. முறையாக வகுப்புகளை நடத்துவது கிடையாது. பலர் ஆசிரியர் பணி அல்லாமல், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் போன்ற ஆசிரியர் பணிக்கு சம்பந்தமே இல்லாத பகுதி நேர தொழில் களை செய்கின்றனர்.

பள்ளிக்கூடத்தை சரிவர நடத்தாத ஆசிரியர்களை கண்டித்து பல கிராமங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகள் தரம் குறைந்து காணப்படுகிறது. இதனால், 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எழுத, படிக்க தெரியவில்லை. ‘பயோ- மெட்ரிக்’ என்னும் கை விரல் பதிவு எந்திரம் முறையை ஏன் அமல்படுத்தக்கூடாது?,  போலீஸ்காரர்களுக்கு சங்கம் தொடங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டது போல, மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் வருகிற ஜூலை 14-ந் தேதி விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
Auto Scroll Stop Scroll