Friday, March 10

தமிழ் பாடத்திற்கு முன்னுரிமை கோரி தமிழாசிரியர்கள் நாளை போராட்டம்

அரசு உயர்நிலை பள்ளிகளில், தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழக தமிழாசிரியர் கழகம், நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.

இது குறித்து, தமிழக தமிழாசிரியர் கழக தலைமை நிலைய செயலர் மதியழகன் கூறியதாவது:


தாய்மொழியான தமிழில், அனைத்து மாணவர்களும் தடுமாற்ற மின்றி பேசவும், எழுதவும், பயிற்சி அளிக்கும் வகையில், பள்ளிகளில் தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். தற்போது, 10ம் வகுப்பு வரையுள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில், 300க்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில், அரசாணை, 266யை திருத்தி, தமிழ் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில், தமிழக மாணவர்கள், தேர்வுக்கு நன்றாக தயாராகும் வகையில், முதல் தாளுக்கும், இரண்டாம் தாளுக்கும் இடையே விடுமுறை அளிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் போது, ஆசிரியர்களுக்கு தேவையான இட வசதிகளை செய்து தருவதுடன், விடைத்தாள்களை குறைந்த எண்ணிக்கையில் வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட, 12 கோரிக்கைகளை வலியுறுத்தி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Auto Scroll Stop Scroll