Saturday, March 25

3 மாதமாக ஆசிரியர்கள் வராததால் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்



திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, மூன்று மாதமாக, ஆசிரியர்கள் வராததால், பள்ளிக்கு பூட்டு போட்டு, பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிறுவேளியநல்லுாரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 118 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் உட்பட ஏழு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் உட்பட மூன்று ஆசிரியர்கள், கடந்த, மூன்று மாதமாக முறையாக பள்ளிக்கு வரவில்லை. இதனால், மாணவர்கள் சரிவர பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தனர்.

இது குறித்து, மாணவர்களிடம், பெற்றோர் விசாரித்தபோது, அங்கு தலைமை ஆசிரியர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை என தெரிந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் பெற்றோர், பல முறை புகார் அளித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள், 'தலைமை ஆசிரியர் உள்ளிட்ட, ஏழு பேரும் பள்ளிக்கு வந்தால் தான் பள்ளியை திறப்போம்' என கூறி, பள்ளிக்கு பூட்டு போட்டு, நேற்று காலை, போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு உதவி கல்வி அலுவலர், அங்கு வந்து பேச்சு நடத்தினார். பள்ளிக்கு சரிவர வராத ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.
இதை ஏற்று, பெற்றோர் கலைந்து சென்றனர். அதன்பின், பள்ளி திறக்கப்பட்டது. இதனால் அங்கு, இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Auto Scroll Stop Scroll