Thursday, February 2

பாளையங்கோட்டையில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வீ. பார்த்தசாரதி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மு. சுப்பு வரவேற்றார். காப்பீட்டு ஊழியர் சங்க பொதுச் செயலர் செ. முத்துக்குமாரசுவாமி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார்.



அரசு ஊழியர் சங்க மாவட்டச் செலர் துரைசிங், கோரிóக்கைகளை விளக்கிப் பேசினார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8ஆவது ஊதிய மாற்றக் குழுவை அமைத்து விரைந்து அனைவருக்கும் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். அதுவரையில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். காலியாகவுள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். சாலைப் பணியாளர்களின் வேலை நிறுத்தக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, பொது சுகாதாரத்துறை, வணிகவரி, சமூக நலத்துறை, சாலைப் பணியாளர், நில அளவை அலுவலர்கள், அங்கன்வாடி, சத்துணவு மையம் என பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.

காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை, மாலையில் சங்க மாநில துணைத் தலைவர் ந. குமாரவேல் முடித்து வைத்தார். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Auto Scroll Stop Scroll