Saturday, December 10

நாளிதழ் படிக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு-ஆசிரியர் வெள்ளியங்கிரிகல்வியை கற்றுத்தருவதோடு ஆசிரியர்கள் பணி முடிவதில்லை; அதையும் தாண்டி, மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணருதல், ஒழுக்கம், சிறந்த பண்பாளராக மாற்றும் கடமையும் ஆசிரியர்களுக்கு உண்டு. பல பள்ளிகளில், தற்போது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியோடு தற்போது பல்வேறு திறமைகளையும் வளர்க்க உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 


அதில், நாளிதழ்களை படிப்பதால் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதுடன், அறிவினையும் வளர்த்துக்கொள்ள முடியும். இதை மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ஆசிரியர் வெள்ளியங்கிரி. பொள்ளாச்சி அருகே ஆனைமலை பொங்காளியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக உள்ளார் வெள்ளியங்கிரி. இவர், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் இளங்கலை பட்டம், கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லுாரியில் முதுகலைப்பட்டம், ராமகிருஷ்ணா வித்யாலயத்தில் கல்வியியல் பட்டம் பெற்றுள்ளார்.அரசு ஆசிரியர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் பட்டதாரி ஆசிரியராக பணியேற்று, தற்போது பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

 இவரால், கடந்த 2005ம் ஆண்டு அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்., 15ல் உருவாக்கப்பட்டது மைத்துளி கல்வி அறக்கட்டளை.இவர் தனது அனுபவத்தை நம்மிடம் கூறியதாவது: ''சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, முயற்சி செய்யும் வரை மனிதன்!, நீ மனிதன்!'' என்ற வைரமுத்துவின் வரிகளுக்கேற்ப வாழ்க்கையில் ஒருவர் மேற்கொள்ளும் தொடர் முயற்சியே அவர்களின் முன்னேற்றத்துக்கு காரணமாய் அமைகிறது. அந்த முன்னேற்றம் கல்விச்சாலைகளில் தான் ஆரம்பிக்கப்பட வேண்டும். கல்வியோடு பொது அறிவினை வளர்ப்பதன் மூலம் அவர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், சமுதாய வளர்ச்சியை உற்று நோக்கி 'அறம் செய்ய விரும்பு' கிறவர்களாகவும் மாற்றலாம்.

 மேலும், 'நாளும் நாளிதழ் படிப்போம்! ஞாலம் அறிந்திட துடிப்போம்' என்ற கருத்தின் அடிப்படையில், செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தினை மாணவர்களிடையே உருவாக்கி வருகிறோம். இதை ஊக்குவிக்க 'மைத்துளி' என்ற பெயரில், வாரத்தேர்வு, மாதத்தேர்வு போன்றவையும் நடத்தப்படுகிறது. மேலும், அனைத்து ஆசிரியர் கூட்டங்களிலும் தவறாமல் பொது அறிவுத்தேர்வினை நடத்தி வெற்றி பெற்றோருக்கு சிறந்த புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளேன். கடந்த 11 ஆண்டுகளாக, 400 தேர்வுகளை தாண்டி நடந்து வருகிறது. பாடக்கருத்துக்களையும், தேசிய தினங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், எளியவடிவில் தானே சொந்தமாக பாடல்களாக இயற்றி கற்பித்து வருகிறேன். ஆசிரியர்களுக்கு பயனளிக்கும் விதமாக தொலைபேசி வழி வினாடி வினா, அஞ்சல் வழி பொது அறிவு போட்டிகள், ஒன்றிய அளவிலான கலை, இலக்கிய போட்டிகள் என நடத்தப்பட்டு, அவர்களது அறிவினை வளர்க்க சிறு முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.எனது முயற்சிக்கு மனைவி மைதிலி உதவியாக உள்ளார்.

 அவரும் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.அறக்கட்டளை பணிக்காக நன்கொடை ஏதும் பெறாமல் மாத வருமானத்தின் ஒரு பகுதியை செலவிட்டு வருகிறோம். பள்ளியில் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு சக ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள், கல்விக்குழு உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். 'தினமலர்- ஏர் இண்டியா நடத்திய சிறந்த பல்திறன் ஆசிரியர்களுக்கான போட்டியில், கோவை மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியராக 'போல்ட் அவார்டு' மற்றும் தினமலர் நாளிதழ் வழங்கிய லட்சிய ஆசிரியர் விருதினை பெற்றது மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன்.தமிழ்நாடு அரசின் 6ம் வகுப்பு சமச்சீர் கல்வி அறிவியல் பாட நுால் தயாரிப்பு குழு உறுப்பினராகவும் உள்ளேன். படிக்கும் பழக்கத்தினை சிறுவயதிலேயே கொண்டு வரும் வகையிலும், நாளிதழ்கள் படிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் எனது முயற்சி தொடர்கிறது. அதில், கிடைக்கும் வெற்றி தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகும். இவ்வாறு, வெள்ளியங்கிரி கூறினார்.
Auto Scroll Stop Scroll