Wednesday, December 28

ஆதார் உதவி மையங்கள் 2 மாதங்கள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கும் வகையில், அதற்கான உதவி மையங்கள் பிப்ரவரி மாத இறுதி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் என மொத்தம் 545 நிரந்தர சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்கள் மூலம் இதுவரை 8.5 லட்சம் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆதார் பதிவுக்கென கட்டணம் ஏதுமில்லை.
உதவி மையங்கள்: ஆதார் அட்டைக்குப் பதிவு செய்து, அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், அட்டையைத் தொலைத்தவர்கள் தங்களது ஆதார் எண்ணைத் தெரிந்து கொள்ளலாம்.


இதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தற்போது, தமிழகத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் என மொத்தம் 301 இடங்களில் ஆதார் உதவி மையங்களை அமைந்துள்ளது. இந்த மையங்கள் புதன்கிழமை (டிச.28) முதல் பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை செயல்படும்.


ஆதார் எண்ணுக்கு ஏற்கெனவே பதிவுகளைச் செய்துவிட்டு, ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு எண், கைவிரல் ரேகை, கருவிழிகளைப் பதிவு செய்து, சில விநாடிகளில் தங்களின் ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம்.
பிளாஸ்டிக் அட்டை: ஆதார் எண்ணை, ஆதார் உதவி மையங்களின் அருகிலேயே இயங்கும் அரசு இணைய சேவை மையங்களில் காண்பிக்கலாம். விரல்ரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் அட்டை அல்லது ரூ.10 கட்டணத்தில் காகிதத்தில் அச்சிட்டோ அதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Auto Scroll Stop Scroll