Tuesday, November 8

746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: அரசால் அமைக்கப்பட்ட குழுவில் 3 கல்வியாளர்களை நியமித்து உத்தரவு

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில், அரசால் அமைக்கப்பட்ட குழுவில் 3 கல்வியாளர்களையும் இணைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக "மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் ஏ.நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் உள்ள 746 பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக் கூட கடைப்பிடிக்கவில்லை. இந்தப் பள்ளிகளுக்கு, கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தாற்காலிக அங்கீகாரத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்கி வருகிறது.



இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, மே 31-ஆம் தேதி வரை ஒரே ஒரு முறை என்ற அடிப்படையில், தாற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு மேல் நிலம் உள்ளிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என்றும் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால், தற்போது 746 பள்ளிகளில், பல பள்ளிகள் அரசு நிர்ணயம் செய்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் உள்ளன. எனவே, இந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரத்தை நீட்டிக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும். அங்கீகாரம் பெறாத இந்தப் பள்ளிகளின் விவரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக விளம்பரப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு மீண்டும் அதே அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.சபீதா நேரில் ஆஜரானார்.


பின்னர் நடைபெற்ற இரு தரப்பு வாதங்களை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறைந்தபட்ச இட வசதி போன்ற மற்ற வசதிகள் குறித்து அதிகாரிகள் அடங்கிய குழு வரையறை செய்து அறிக்கை தயாரித்துள்ளது. ஆனால், இந்தக் குழுவில் துறை அதிகாரிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இது ஏற்புடையதல்ல.
ஆகையால், இந்தக் குழுவில் 3 கல்வியாளர்கள் இடம் பெற வேண்டும். எனவே கல்வியாளர்கள் எஸ்.எல்.சிட்டிபாபு, லலிதா, எஸ்.எஸ்.ராஜகோபால் ஆகியோரை அரசு நியமித்த குழுவில் இணைக்கிறோம்.
இந்தக் குழு கும்பகோணம் கோர விபத்து சம்பவம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மனதில் வைத்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் குறைந்தபட்ச இட வசதி தொடர்பான விதிமுறைகளைச் சரியாகக் கணிக்க வேண்டும்.


அதேபோன்று, இந்தக் குழுவினருடன் ஆலோசித்து 4 வாரத்தில் தகுந்த முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Auto Scroll Stop Scroll