Friday, November 25

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு டிச.2 வரை நீட்டிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு டிசம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு வரை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது.
அதிக மதிப்புடைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


இதை அடுத்து, சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டதால் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நவம்பர் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சுங்கவரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.



அதன்பிறகு, நவம்பர் 11-இல் இருந்து 14-ஆம் தேதி வரை ஒருமுறையும், 14-ஆம் தேதியிலிருந்து 24-ஆம் தேதி வரை மற்றொரு முறையும் சுங்கவரி ரத்தை மத்திய அரசு நீட்டித்தது.
இந்நிலையில், சுங்கவரி ரத்தை டிசம்பர் 2-ஆம் தேதி வரை மத்திய அரசு மீண்டும் நீட்டிப்பு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

சுங்கச்சாவடிகளில் சில்லறை தட்டுப்பாடு நிலவி வருவதால் நெரிசலின்றி வாகனங்கள் செல்ல வேண்டும் என்ற நோக்கில் சுங்கவரி ரத்து மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


பழைய ரூ.500 பெறப்படும்: அத்துடன், டிசம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகள் சுங்கச் சாவடிகளில் பெற்றுக் கொள்ளப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
Auto Scroll Stop Scroll