Monday, October 31

'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா?

வங்கிகளின், 'பிளாஸ்டிக் கார்டு' இப்போது பணப் பரிவர்த்தனையின் முக்கிய அங்கமாகும். ஆனால், ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணப் பரிவர்த்தனை மையங்களில் இருந்து, 'டெபிட் கார்டு'களில் நடந்த மோசடியில், 1.3 கோடி ரூபாய் கரைந்து, வாடிக்கையாளர் நொந்துள்ளனர்.
இது குறித்த தகவல்களில், 19 வங்கிகள், அதில் வாடிக்கையாளர்களாக உள்ள, 641 பேர், தங்களது பணத்தை இழந்துள்ளனர் என கண்டறியப்பட்டிருக்கிறது. ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர்கள் சிலர் இழந்த, 10 லட்சம் ரூபாய்க்கு பின்னணியாக, சீனாவில் திருட்டு நடந்திருப்பது தெரிகிறது.

வங்கியின் பிளாஸ்டிக் கார்டு தகவல்களுடன், அதை வைத்திருப்போரின் மொபைல் எண்ணும் சேர்ந்து பணப்பரிவர்த்தனை நடந்த போது, அதை திருடிப் பயன்படுத்தியது தெரிந்தது. அதேபோல, வங்கி சேமிப்பு அல்லது நடப்புக்கணக்கு தகவல்களை வாடிக்கையாளர் வங்கியில் உள்ள கணக்கு இயந்திரத்தில், கார்டு மூலம் பரிவர்த்தனை நடத்தியதிலும் தகவல் திருட்டு நடந்திருக்கிறது.
இங்குள்ள நபர்களின் கார்டுகளை, சீனாவில் இருந்தபடி கையாண்ட விதத்தை கண்டுபிடித்த போது, இம்மோசடி பலரையும் திடுக்கிட வைக்கிறது. இவை நடந்து சில மாதங்களே ஆனாலும், ரிசர்வ் வங்கி சில எச்சரிக்கைகளை அளித்த போதும், பரபரப்பு நடவடிக்கை இப்போது ஆரம்பமாகி இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், 'ஏ.டி.எம்., பணப் பரிவர்த்தனை, பிளாஸ்டிக் கார்டு வேகம் ஆகியவை தற்போது மக்களை ஈர்த்திருக்கிறது; இதில் ஏதாவது சிக்கல் வந்தால் அதைச் சமாளிக்க வங்கிகள், 'சைபர் செக்யூரிட்டி'யை வலுவாக்கி கையாள வேண்டும்' என்று கூறினார்.
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ந்து வருவதை அழகாக அடுக்கிச் சொல்பவர். அவரும், இச்சம்பவம் பற்றி கூறுகையில், 'சைபர் செக்யூரிட்டி, அதிக சவால்களை சந்தித்து சிக்கல்களுக்கு வழிகாண வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய அரசும், சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறைகளில் அதிக பாதுகாப்புக்கான ஆய்வு மற்றும் நடைமுறைகள் அதிகரிக்க, 1,000 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்திருக்கிறது.ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சகம், தகவல் தொழில்நுட்பத் துறை ஆகிய அனைத்தும் கார்டுதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், இந்த சைபர் கிரைம் பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில், டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பம் அதிகம் பரவுகிறது. அதுவும் மொபைல் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் அளவுக்கு, அன்றாடம் இதன் பரிமாணங்கள் அதிகரிக்கும் போது இந்த, 'சைபர் திருட்டு' அனைவரையும் மிரள வைத்திருக்கிறது.
இனி, 'டெபிட் கார்டு' வைத்திருப்பவர்கள் அதில் ஒரு லட்சம் ரூபாய் இருப்பு வைக்க அஞ்சலாம். ஏனெனில் இது, இம்மாதிரி, 3.25 லட்சம் பிளாஸ்டிக் கார்டு வைத்திருப்போர் தொடர்புடைய விஷயம். அதற்காக மீண்டும் பழைய நடைமுறைக்கு மாற வேண்டும் என்பதும் ஏற்க முடியாதது. 
அதே போல, எந்த வங்கியின், ஏ.டி.எம்., பாதுகாப்பானது, எது என்ற கேள்விக்கு விடை இல்லை. காரணம் இத்திருட்டு குறித்து வங்கிகள் ஒட்டுமொத்தமாக ஆலோசித்து, ஏ.டி.எம்.,களை மேலும் நவீன மயமாக்கி, தகவல் திருட்டையும், அதனால் நுகர்வோர் பண இழப்பையும் எப்படி தடுக்கலாம் என்பதற்கு விடை காணவில்லை.
அத்துடன், 'பின்' எண்ணை மற்றவர் அறியாமல் பொருட்களை வாங்க வேண்டும் என்பதும், 'இணையதள பாஸ்வேர்டை' அடிக்கடி மாற்றி திருட்டைத் தவிர்க்கவும் யோசனை கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இருசக்கர வாகனங்கள் திருட்டு, வீடுகளில் கள்ளச்சாவி போட்டு திருடுவது போல இத்திருட்டில் ஈடுபடுவோர், பல்வேறு நபர்களின், 'பாஸ்வேர்டு மற்றும் பின் எண்' என்ற பலவற்றை திருடி, பணம் கூடுதலாக இருப்பதைக் கண்டறிந்து அதிலிருந்து திருடி உள்ளனர். 
'இம்மாதிரி குற்றங்கள் நிகழ்ந்ததும் அதை கையாள, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க, தனியாக ஒரு அமைப்பும், அது ஆய்வு செய்வதற்கான நடைமுறைகளை கொண்ட வழிவகையை உருவாக்க வேண்டும்' என்று அரசுக்கு, இத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். அது விரைவில் வருமா என்று இப்போது கூற முடியாது.
Auto Scroll Stop Scroll