Tuesday, September 20

பேராசிரியர் நியமனங்களில் விதிமீறல் : விரைவில் புதிய கவர்னர் விசாரணை?

தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பேராசிரியர்கள் நியமனத்தில் நடந்த விதிமீறல்கள் தொடர்பாக, விரைவில், புதிய கவர்னர் விசாரணை நடத்த உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கு : தமிழகத்தில் உள்ள, 13 பல்கலைகள், 80 அரசு கல்லுாரிகள் மற்றும், 139 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன், கற்பித்தல் அல்லாத நிர்வாக பதவிகளுக்கும், ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.'இந்த நியமனங்களில், மத்திய அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை' என்ற, புகார் எழுந்தது. வேலுார், திருவள்ளுவர்பல்கலையில் நடந்த நியமனங்கள் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்த போது, மத்திய அரசின் பல்கலைக் கழக மானியக்குழு அளித்த பதிலில், 'பேராசிரியர்கள் நியமனங்களில் விதிமீறல்கள் நடந்துள்ளது உண்மையே' என, தெரிவிக்கப் பட்டது.
அத்துடன், அரசு கல்லுாரிகளில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய நியமனங்களிலும், பிஎச்.டி.,மற்றும், 'நெட், செட்' தகுதி சார்ந்த விதிமுறைகளில், விதிமீறல்கள் நடந்துள்ளதாக, நெட், செட் சங்கத்தினர் புகார் கூறி வருகின்றனர். இது தொடர்பாக, சமீபத்தில், டில்லியில் போராட்டமும் நடந்தது.

உத்தரவு : எனவே, இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த, மத்திய அரசின் உயர் கல்வித்துறை செயலருக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. இதனடிப்படையில், தமிழக பல்கலைகளின் வேந்தரான, புதிய கவர்னர் வித்யாசாகர் விசாரணை நடத்த உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Auto Scroll Stop Scroll