போராட்டம் அறிவித்த, கல்லுாரி ஆசிரியர் கூட்டமைப்பிடம், உயர் கல்வித்துறை சமாதான கடிதம் அளித்துள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற, ஆசிரியர்கள், ஒரு மாதம் கெடு விதித்துள்ளனர். தமிழகத்தில், 87 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள், 162 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன; இரண்டு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், முதல்வர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும், கல்லுாரிகளில், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.
இது குறித்து ஆசிரியர் சங்கத்தின் சார்பில், அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அனுப்பியும், நடவடிக்கை இல்லை. இதனால், இரண்டு நாட்கள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக, கல்லுாரி ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜேக்' அறிவித்தது. அரசு தரப்பில், கல்லுாரி கல்வி இயக்குனர், ராஜேந்திர ரத்னு, 'ஜேக்' அமைப்பினரிடம், சமாதான பேச்சு நடத்தினார்.
முடிவில், 'தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தேர்தல் முடிந்ததும், கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்; போராட்டத்தை கைவிடுங்கள்' என, எழுத்துப்பூர்வமான கடிதம் கொடுக்கப்பட்டது.
இது குறித்து, 'ஜேக்' செயலர், பசுபதி கூறுகையில், ''மேலும் அவகாசம் கேட்கக்கூடாது; அக்டோபர் இறுதிக்குள், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், போராட்டம், தீவிரமாகும்,'' என்றார்