Saturday, September 17

புதிதாக 5 வட்டங்கள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கயத்தாறு, சிங்கம்புணரி உள்பட 5 புதிய தாலுகாக்கள் ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.மக்களை நாடி வருவாய்த் துறையின் சேவைகள் அதிவிரைவாகக் கிடைத்திடும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் 9 புதிய கோட்டங்களும், 65 புதிய வட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக நிகழாண்டில், கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தைப் பிரித்து ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு புதிய வட்டமும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தைப் பிரித்து ஆண்டிமடத்தில் புதிய வட்டமும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டத்தைப் பிரித்து கூத்தாநல்லூரில் ஒரு புதிய வட்டமும், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி-ஒட்டப்பிடாரம் வட்டங்களைச் சீரமைத்து கயத்தாரில் ஒரு புதிய வட்டமும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டத்தைப் பிரித்து சிங்கம்புணரியில் ஒரு புதிய வட்டம் என மொத்தம் 5 புதிய வட்டங்கள் உருவாக்கப்படும். இதற்கென ரூ.4 கோடி செலவு ஏற்படும்.இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
16 வட்டங்களுக்கு புதிய அலுவலகங்கள்: கடந்த 5 ஆண்டுகளில் வருவாய்த் துறையின் கீழ் 377 கட்டடங்கள் கட்டப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நிகழாண்டில் நாமக்கல் கொமாரப்பாளையம், சேலம் காடையாம்பட்டி, திருவண்ணாமலை கீழ்ப்பென்னாத்தூர், திருநெல்வேலி மானூர், சேரன்மகாதேவி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, வேலூர் மாவட்டம் நெமிலி, பேர்ணாம்பட்டு, ஈரோடு மாவட்டம் கொடுமுடி, மொடக்குறிச்சி, தாளவாடி, காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், மேல்மலையனூர், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகிய 16 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திமுக கோரிக்கை ஏற்பு: சட்டப் பேரவைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பன், திருப்பத்தூர் வட்டத்தைப் பிரித்து சிங்கம்புணரியில் புதிய வட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Auto Scroll Stop Scroll