Saturday, August 20

வரலாறு படைத்தார் சிந்து!

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கரோலினா மரின் 19-21, 21-12, 21-15 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
முதல் செட்டின் ஆரம்பத்தில் சற்று தடுமாறிய சிந்து, பின்னர் அபாரமாக ஆட, கரோலினாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் 16-19 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த சிந்து, அடுத்த 5 கேம்களைதொடர்ச்சியாக வென்று முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

ஆனால், அடுத்த செட்டை கரோலினா 21-12 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டிலும் கரோலினாவே ஆதிக்கம் செலுத்தினார்.
ஒரு கட்டத்தில் சிந்து கடுமையாகப் போராடியபோதும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் அந்த செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார் கரோலினா.
இதனால் சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 4-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சிந்து.
துப்பாக்கிச் சுடுதல் வீரர்களான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (2004, ஏதென்ஸ்), விஜய் குமார் (2012, லண்டன்), மல்யுத்த வீரர் சுஷீல் குமார் (2012 லண்டன்) ஆகியோர் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மற்ற
இந்தியர்கள் ஆவர்.
இதேபோல் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5-ஆவது இந்திய வீராங்கனை, வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளும் சிந்து வசமாகியுள்ளது. இதுதவிர இளம் வயதில் (21)
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் சிந்து தட்டிச் சென்றுள்ளார். சிந்து வெள்ளி வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2-ஆவது பதக்கத்தை பெற்றுள்ளது.
குடியரசுத் தலைவர் பாராட்டு
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "சிந்து, நீங்கள் படைத்திருக்கும் இந்த சாதனைக்காக, உங்களோடு இணைந்து இந்திய மக்களும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். உங்களது இந்த மன உறுதி, இதர இந்திய விளையாட்டு வீரர்களிடமும் தன்னம்பிக்கையை விதைக்கும். இதன்மூலம் சர்வதேச அளவிலான போட்டிகளில் அவர்களும் சாதிக்க முடியும்' என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பாராட்டு
சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், "சில்வர் சிந்துவுக்கு எனது வாழ்த்துகள். சிறப்பாக போராடினீர்கள். ரியோ ஒலிம்பிக்கில் நீங்கள் செய்த சாதனை, வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்தது. இது பல ஆண்டுகளுக்கு நினைவு கூரப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

சோனியா பாராட்டு
ஒவ்வொரு இளம் இந்தியர்கள் மனதிலும் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளார் சிந்து. அவரது இந்த வெள்ளிப் பதக்கம், இந்தியத் தாயின் மகுடத்தில் பதிக்கப்பட்டுள்ள விலைமதிக்க முடியாத ஒரு
ஆபரணமாகும். ஒரு நட்சத்திரத்தைப் போல விளையாடிய அவர், அனைத்து இந்தியர்களையும் பெருமையடையச் செய்துள்ளார்.

ஆந்திர முதல்வர் பாராட்டு
தங்கப் பதக்கத்துக்காக மனம்தளராமல் போராடிய சிந்து, இந்திய இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளார். அவர் தெலுங்கு பெண் என்பதில் பெருமை கொள்கிறோம். சிந்துவின் வெற்றிக்காக
பாடுபட்ட பயிற்சியாளர் கோபிசந்துக்கும் பாராட்டுகள் என ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ரூ.2 கோடி, 2 கார்... கொட்டும் பரிசு மழை!
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துக்கு பரிசு மழை கொட்டி வருகிறது. அவருடைய சொந்த மாநிலமான தெலங்கானா சார்பில் அவருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மனையும் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பாட்மிண்டன் சங்கம் (பாய்), சிந்துவுக்கு ரூ.50 லட்சமும், பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.10 லட்சமும் வழங்குகிறது.
மத்தியப் பிரதேசத்தின் சார்பில் சிந்துவுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் ரூ.5 லட்சம்
வழங்கப்படுகிறது. ஹைதராபாத் மாவட்ட பாட்மிண்டன் சங்க தலைவர் சாமுண்டீஸ்வரநாத், பி.எம்.டபிள்யூ காரை சிந்துவுக்கு பரிசளிக்கிறார். இவர், லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா வெண்கலம்
வென்றபோது அவருக்கும் கார் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் எஸ்யூவி கார் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயவாடாவைச் சேர்ந்த பிரபல தங்க நகைக் கடை, சிந்துவை விளம்பரத் தூதராக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் ஏராளமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சிந்துவுக்கு வீடு பரிசளிக்கவுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
Auto Scroll Stop Scroll